Wayanad Landslide : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அப்பகுதியில் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயநாடு சூரல்மலை பகுதியில் கேரளா மின்சார வாரியம் கட்டிய அணையும் நிரம்பியதால் அணையின் நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கனமழையால் பெரும் எண்ணிக்கையிலான கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் அதிகாலை 4.30 மணிக்கு மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 50-ஆக அதிகரித்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் புதைந்த நிலையில், இந்த வீடுகளில் சிக்கிய 1000 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு சூரல்மலை மீட்புப் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை வரையிலான ஒரே ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.
இந்த சூழலில் கேரளா மாநில சுகாதாரத்துறை மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. 8086010833, 9656938689 ஆகியவை உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மனந்தவாடி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன.
இதையும் படிங்க : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தால் பாஜகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை – தமிழிசை
இந்நிலையில், கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு Wayanad Landslide மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பது வேதனை அளிக்கிறது. முழுவீச்சில் அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.