பல ஆண்டுகளாக காத்திருக்கும் 80 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் எப்போது? என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கூடுதலாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து பல மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.
மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழக அரசு செய்யும் தாமதம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தவர்கள், கணவனை இழந்த கைம்பெண்கள் என ஒரு லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் இந்தத் திட்டங்களின் கீழ் பயனடைய விண்ணப்பித்து, தகுதி பெற்று உதவித்தொகை கிடைக்காமல் காத்துக் கிடக்கின்றனர். அவர்களின் நிலையறிந்து உடனடியாக உதவ வேண்டிய தமிழக அரசு வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசு சார்பில் செய்யப்படும் தாமதத்தால் 80 ஆயிரம் பேருக்கு கூடுதலாக உதவித் தொகை வழங்கப்படுமா? அல்லது இந்த அறிவிப்பு காற்றோடு போய்விடுமா? என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. இதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆந்திர மாநில அரசைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்.
Also Read : சம்பாதிப்பதற்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானியை குறிவைக்கிறது – அண்ணாமலை
தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியமாக ரூ.1200 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் மாதம் ரூ.3000 வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அது ரூ.4000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 வகையான உதவித் திட்டங்கள் வெறும் 34.90 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் நிலையில், ஆந்திரத்தில் மொத்தம் 66.34 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக நடப்பாண்டில் தமிழக அரசு செலவழிக்கும் தொகை ரூ.5337 கோடி மட்டும் தான். ஆனால், இந்தத் திட்டங்களுக்காக ஆந்திரத்தில் நடப்பாண்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.33,100 கோடி ஆகும். தமிழ்நாட்டை விட ஆந்திரத்தில் மக்கள்தொகை குறைவு என்றாலும், தமிழ்நாட்டைவிட 6 மடங்கு தொகையை ஆந்திரம் சமூகப் பாதுகாப்பு நிதியாக வழங்குகிறது. ஆந்திரத்தின் இந்த செயல் பாராட்டத்தக்கது.
தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், முதியோர் ஓய்வூதியத் திட்டம், கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பயனாளிகள் எண்ணிக்கையை 80 ஆயிரம் அதிகரிக்க வேண்டும். அதேபோல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான ஓய்வூதியத்தின் அளவை ரூ. 4000 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.