சேலத்தில் நேற்று நடைபெற்ற பாஜகவின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு (trbalu) உரையாற்றிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு திமுகவின் பொருளாளரும் எம்பியுமான டி.ஆர். பாலு பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமரின் பேச்சுக்கு தற்போது அடுக்கடுக்கான கேள்விகளுடன் பதிலடி கொடுத்துள்ள டி.ஆர். பாலு கூறிருப்பதாவது :
வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார்.
பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் வாய்ப்பு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார்.
தமிழகத்தில் பாஜகவுக்குக் கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது’’ எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்.
உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள்.
சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்துப் பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தான் சேலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவு கூறுவது ஏன்?
கோவையில் ரோட் ஷோ நடத்திய போது 1998-ல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பாஜக நடத்த ஆரம்பித்திருக்கிறது. ரோட்டில் ஷோ காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.
”திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’’ எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேச மோடிக்குத் தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பாஜக நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது.
பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் மோடி. ’’பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி.
மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா? மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது.
“தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்றுவோம்” என்கிறார் மோடி. திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்திய போது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம்.
ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பாஜகவின் நாலாந்தரப் (trbalu) பேச்சாளரைப் போல பேசக் கூடாது. 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேச மாட்டார் என டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.