தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் இந்த ஆண்டு தொடங்கிய கோடை வெயில், ஜூன் இறுதி வரை கொளுத்தியது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் ஒரு சில நாட்களில் மழை பெய்தது. ஆனால் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் நேற்று இரவு சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் இடைவிடாமல் மழை பெய்தது. குறிப்பாக ஐஸ் ஹவுஸ், மதுரவாயல், அண்ணாநகர், போரூர் , தி.நகர், அடையாறு, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், கோபாலபுரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது.
அதே போல் சென்னையின் புறநகர் பகுதிகளான சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில் மழைபொழிந்து வருகிறது.
இந்த நிலையில் இன்றும் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதேபோல, ஆகஸ்ட் 19, 20, 23 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 21, 22ஆம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது