இந்தியா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், விக்கிபீடியா நிறுவனம் இங்கிருந்து வெளியேறலாம் என உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு விக்கிபீடியா இணையதளம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் கலைக்களஞ்சியமான இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்ட எவரும் ஒரு கட்டுரையை உருவாக்கலாம். திருத்தலாம்.
இந்த தளத்தில், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறித்த தகவலை அவதூறாக சித்தரித்து 3 முறை திருத்தி உள்ளனர். இதனை எதிர்த்து ஏஎன்ஐ சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 2 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக்கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, அந்த பக்கத்தை திருத்தியவர்களின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார். ஆனால், அந்நிறுவனம் இந்தியாவில் செயல்படாததால் தகவல்களை தருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் கோபமடைந்த நீதிபதி கூறியதாவது:
விக்கிபீடியா இந்தியாவில் ஒரு நிறுவனமாக இல்லை என்பது கேள்வி அல்ல. இதற்கு முன்பும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள். உங்கள் வணிகத்தை இங்கு நிறுத்தும்படி அரசுக்கு உத்தரவிடுவோம்.
இணையதளத்தை தடை செய்யும்படி உத்தரவிட முடியும். உங்களுக்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால், இங்கிருந்து பணியாற்றாதீர்கள் என நீதிபதி உத்தரவிட்டார்.