கொடைக்கானல் அருகே கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு காட்டாற்று வெள்ளம் ஓடி வருவதால் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர் .
கொடைக்கானலில் கடைக்கோடி கிராமமான சின்னூரில் 9 நாட்களாக மாரியம்மாள் என்ற பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார் . இந்நிலையில் நேரம் கடக்க கடக்க உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் அப்பெண்ணை டோலி கட்டி காட்டு வழியில் 10 கி.மீ. தூரத்திற்கு தூக்கிச் சென்று ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .
கடந்த ஒரு வாரமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஆறுகளைக் கடக்க முடியாத சூழல் இருந்து வந்த நிலையில் தற்போது ஆறுகளில் நீர் வரத்து குறைந்தததால் , இன்று மாரியம்மாள் என்ற அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அந்தப் பகுதியில் தற்காலிகமாகவாவது ஒரு பாலத்தை அமைத்துத் தந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும் என அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கோரிக்கை வைக்கின்றனர்.