மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யு.பி.எல்) ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது . அந்தவகையில் நடப்பாண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் வீராங்கனைகள் ஏலம் பெங்களூரில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது.
முன்னதாக ஏலத்தில் கமலினிக்கு ரூ.10 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது. இதேபோல் சிம்ரன் ஷேக்கை ரூ. 1.90 கோடிக்கும், டியான்ட்ரா டாட்டினை ரூ 1.70 கோடிக்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் வாங்கியுள்ளது.
Also Read : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை சேவை..!!
யார் இந்த ஜி. கமலினி :
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி கமலினி 311 ரன்களை குவித்துள்ளார். அந்த தொடரில் அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் கமலினிதான் இரண்டாம் இடம் ஆவார். இந்த தொடரில் தமிழ்நாடு கோப்பையை வெல்லவும் அவர் முக்கிய பங்காற்றினார்.
இடது கை பேட்டரான அவர் அந்த தொடரில் மொத்தம் 10 சிக்ஸர்களை அடித்து, தொடரின் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் மற்றொரு வீராங்கனையுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான முத்தரப்பு தொடரில் (U19 Women’s Tri Series) தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பி அணி சார்பில் 79 ரன்களை குவித்து பலரின் கவனத்தை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து, முதல்முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் (U19 Women’s Asia Cup) வரும் டிச.22ஆம் தேதி மலேசியாவில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்திய அணியில் ஜி. கமாலினி இடம்பெற்றுள்ளார். மேலும் இவர் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர் ஆவார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.