டாஸ்மாக் ஊழல் புகார்களுக்கு மத்தியில் அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக டெல்லி சென்று வந்திருப்பதாக வெளியாகும் தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் TASMAC மீதான ரெய்டு நடந்து முடிந்த நிலையில், 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது; அதனை செந்தில்பாலாஜி தன் பங்கிற்கு மறுத்திருந்தார். மறுபுறம் தற்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்று வந்துள்ளார்.
நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்ற அவர், இன்று மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.இந்த பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இதன் காரணமாக, அரசாங்க நிர்வாக ரீதியாக இல்லாமல், இது அரசியல் பயணமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பி.யுமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில், கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 2 நாட்கள் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக கூறப்பட்டது. அதைதொடர்ந்து, அன்றைய நாளின் இரவே, திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுடன் சேர்ந்து டெல்லி சென்று சென்னை திரும்பினார் அவர். தற்போது அதே பாணியில் தான், அமலாக்கத்துறையின் 1000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு வெளியான சில தினங்களிலேயே இரவோடு இரவாக அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்று விரைந்துள்ளார் என ஒற்றுமைப்படுத்தி பார்க்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
அமலாக்கத்துறை பிரச்னையை சுமூகமாக கையாளவே திமுக புள்ளிகள் டெல்லி சென்று பாஜக புள்ளிகளை சந்தித்து வருகின்றனர் என கூறப்படும் நிலையில், தற்போது திமுக ஜாம்பவான்கள் படிப்படியாக பாஜகவிடம் சரணடைந்து வருகின்றனரா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
முந்தைய அமலாக்கத்துறை ரெய்டுகள் எல்லாம் சம்மந்தப்பட்ட திமுக புள்ளிகளின் டெல்லி விஜயத்திற்கு பிறகு கிணற்றில் போட்ட கல்லை போல கிடக்கும் நிலையில், செந்தில்பாலாஜியின் டெல்லி விஜயமும் டாஸ்மாக் ரெய்டின் தொடர் நடவடிக்கைகளை அமுக்குமா? இல்லையா? என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும்.