தஞ்சாவூர் அருகே கஞ்சா போதைக் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருப்பினும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“தஞ்சாவூர் அருகே கஞ்சா போதைக் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் – குற்றவாளிகள் யாராக இருப்பினும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர் அவரின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிற்கு வருகை தந்திருந்த போது அங்கிருந்த கஞ்சா போதைக் கும்பலால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரில், முதல் குற்றவாளியான கவிதாசன் என்பவர் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நற்பணி மன்ற நிர்வாகி என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவரும் நிலையில், கைதான மற்றவர்கள் மீதும் ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : பெண்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு!! கேரளா மற்றும் பீகாரைத் தொடர்ந்து..எங்கு?
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தலில் தொடங்கி, பாலியல் வன்கொடுமை வரை தமிழகத்தில் அரங்கேறும் பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கும் திமுகவினருக்குமான தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக தலைமையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், தற்போது இளம்பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யும் அளவிற்கான துணிச்சலை போதைக் கும்பலுக்கு ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.