திருப்பத்தூரில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய காதலன் வீட்டை தீ வைத்து கொளுத்திய இளம் பெண்னின் தந்தை மற்றும் அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் போஸ்ட் மேன் வட்டம் பகுதியைச் சேர்ந்த சிவா, பாரதி தம்பதியின் மகள் அட்சயா. 18 வயதான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான விஜய் என்பவரும் கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்ததாகக் சொல்லப்படுகிறது. இவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரியவர பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த காதலர்கள் இருவரும் இன்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு சென்றுள்ளனர். இதனை தனது மகள் வீட்டில் இல்லை என்பதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் பல இடங்களிலும் தேடி உள்ளனர். அப்போது தான் இளம் பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
இதனால் கோபமடைந்த பெண் வீட்டார் இன்று விஜயின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இதனால் வீடு தீ பற்றி எரிந்தது. இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் போலீசார், தீயை அணைத்தனர்.
மேலும் விஜயின் வீட்டின் மீது தீ வைத்த அட்சயாவின் தந்தை சிவா மற்றும் அண்ணன் அழகேசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.