Site icon itamiltv.com

அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள்: விஜயின் OSD ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல்!

முதலமைச்சர் விஜயின் அரசியல் சிறப்புப் பணி அலுவலராக (OSD) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நியமனம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான காலத்திலேயே, விஜயுடன் தொடர்புடையவராக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்ற ஜோதிடர் பற்றி அதிகமாக பேசப்பட்டது. விஜய் தனது அரசியல் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளில் அவரிடம் ஆலோசனை பெற்றதாகவும் கூறப்பட்டது. மேலும், விஜய் முதலமைச்சராக வருவார் என்று அவர் முன்கூட்டியே கணித்ததாக சமூக வலைதளங்களில் பல வீடியோக்களும் பரவின.

தேர்தலுக்கு முன்பு விஜய் திருச்செந்தூர், ஷீரடி போன்ற இடங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டபோதும் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் அவருடன் சென்றது பேசுபொருளாக இருந்தது. இந்நிலையில் தற்போது அவரை அரசியல் சிறப்புப் பணி அலுவலராக நியமித்து அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. ஆனால் அவர் மேற்கொள்ளும் பணிகள் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இவர் ஜோதிடராக இருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version