ITamilTv

காவிரி நீரை முழுமையாகப் பெற முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக – இபிஎஸ் கண்டனம்!

edappadi palaniswami

Spread the love

இந்த ஆண்டு காவிரி-யில் இருந்து கர்நாடக அரசு நமக்குத் தர வேண்டிய பங்கு நீரை முழுமையாகப் பெறாமல் வேடிக்கை பார்க்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் என

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்,

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகம் காவிரியிலிருந்து மாதாந்திர அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, நெல் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.

அரசு, நெல் குவின்டாலுக்கு ரூ.2,310 என்று நிர்ணயித்திருந்த நிலையில், வியாபாரிகள் நெல் குவின்டாலுக்கு ரூ.3000-க்கு மேல் வழங்குவதால்,

விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் செல்லாமல் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குச் சென்றபோது, அப்பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் கருகி இருந்ததை நான் நேரடியாகப் பார்வையிட்டேன்.

காவிரி

உடனடியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட விடியா தி.மு.க. அரசை வலியுறுத்தினேன். 3.2.2024 நிலவரப்படி, 120அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் சுமார் 70 அடிமட்டுமே தண்ணீர் உள்ளது.

இதுவே, கர்நாடக அணைகளில் 124அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 92 அடியும்; 65அடி உயரமுள்ள கபினியில் 54 அடியும்; 129 அடி உயரமுள்ள ஹேரங்கி அணையில் 102 அடியும் தண்ணீர் உள்ளது.

இந்த ஆண்டு, கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்காக வழங்க வேண்டிய நீரில் சுமார் 90 டி.எம்.சி. தண்ணீர் நிலுவை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தனது அரசியல் கூட்டாளியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் காவிரியில் நமக்குரிய பங்கை வலியுறுத்திப் பெற எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல்,

கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் 38 உறுப்பினர்களைக் கொண்ட விடியா திமுக, காவிரியில் நமக்குரிய பங்கினைப் பெறுவதற்கு இதுவரை எந்தவிதமான முனைப்போ, நடவடிக்கையோ எடுக்கவில்லை.

திரைமறைவில் விடியா திமுக அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசுடன் இணைந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டத்தில்,

மேகதாது பிரச்சனையை ஓட்டெடுப்பு மூலம் நீர்வளக் கமிஷனின் பார்வைக்கு கொண்டு செல்ல அனுமதித்துள்ளது.

கர்நாடகா நமக்குத் தர வேண்டிய நிலுவை பங்கு சுமார் 90 டி.எம்.சி-ஆக உள்ளது. எனவே, விடியா தி.மு.க. அரசு தங்களது சுய லாபத்தையும், காங்கிரஸ் உடனான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியையும்,

கர்நாடகாவில் முதலீடு செய்து நடத்தும் தங்களது தொழில் நிறுவனங்களின் நன்மைகளையும் விடுத்து,

எதிர்வரும் கோடையில் ஏற்படும் கடும் குடிநீர் தேவையை சமாளிக்க தமிழகத்தின் நலனைக் கருத்திற் கொண்டு, கர்நாடக காங்கிரஸிடம் திரைமறைவு வேலைகள் செய்யாமல்,

கர்நாடகம் நமக்குத் தர வேண்டிய சுமார் 90 டி.எம்.சி. நிலுவை நீரை முழுமையாகப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு,

முழு அழுத்தத்தை தர நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.


Spread the love
Exit mobile version