ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா தலைமையிலான அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமுக) ஆகிய கட்சிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் மக்கள் நலன், சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்பாடு குறித்த கொள்கைகளை முன்னெடுத்து நாங்கள் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நாங்கள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.
ராமதஸ் கூறியதாவது, “எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி போட்டியிடும். நமது கொள்கைக்கு இணங்கும் கட்சிகள் எங்களுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கலாம்” என்று தெரிவித்தார்.

