Tamilnadu

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவியில் மாற்றம்: சந்தீப் மிட்டல் நீக்கம் – காரணம் என்ன?

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் (DGP) பொறுப்பில் இருந்த சந்தீப் மிட்டல் தற்போது அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை மாற்றி தேர்தல் ஆணையம் புதிய அதிகாரியை நியமித்துள்ளது.முன்னதாக, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் சென்னை டிஜிபி ஆகியோர் மாற்றப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சாய்குமார் நியமிக்கப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், உள்துறை செயலாளராக இருந்த தீரஜ்குமார் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன் புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், சந்தீப் மிட்டல் நியமனத்துக்கு எதிராக திமுக சார்பில் மூத்த தலைவர் டி.ஆர். பாலு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.

அதில், சந்தீப் மிட்டல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட கருத்துகள் ஒருதலைப்பட்சமானவை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரைத் தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, சந்தீப் மிட்டலை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது. இதனால் தேர்தல் சூழலில் இந்த முடிவு முக்கிய அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *