கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 2 பள்ளி மாணவர்கள் நோரோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா இந்தியாவிலும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பதிப்புக்களை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் கேரளாவிலும் பெரிதும் பாதிபுக்களை ஏற்படுத்தியது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பின், கொரோனா படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தக்காளிக் காய்ச்சல் கேரளாவில் பரவத் தொடங்கியது. குறிப்பாக இந்த தக்காளிக் காச்சல் குழந்தைக்களுக்கு பரவியது.
இந்த நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் 2 பள்ளி மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை உண்ட பிறகே அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் மாணவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இந்த வைரஸ் சுகாதாரமற்ற தண்ணீரின் மூலம் பரவுகிறது. இந்த தொற்று ஏற்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலி ஆகிய அறிகுறிகள் தோன்றும். இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கக் கூடியது.
தொற்று ஏற்பட்ட குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால், கைகளை அடிக்கடி கழுவுவதே தொற்றில் இருந்து காத்துக்கொள்வதற்கான வழி என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு கேரளாவின் பூக்கோடு கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களில் 13 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.