Tamilnadu

கூட்டணியின் ஒற்றுமை பாதிக்கப்படக் கூடாது..-சிபிஎம்-க்கு 5 இடங்கள்- ஸ்டாலின் நிம்மதி!

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 2026 ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம், திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தேர்தல் தொகுதிப் பங்கீட்டு விவகாரங்களை விவாதித்தார்.

இதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடும் முடிவை ஏற்றுக் கொண்டது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்பினோம்.

ஆனால் கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்வதால், கேட்ட இடங்கள் அனைத்தும் கிடைக்கவில்லை. முழு திருப்தி கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணியின் ஒற்றுமை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவில் ஒப்புக் கொண்டோம்” என்றார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போதைய அரசியல் சூழல் மற்றும் புதிய கூட்டணி கட்சிகளை கருத்தில் கொண்டு, இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

திமுக தலைமையிலான கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டும் சில நாட்களுக்குள் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, என்.டி.ஏ. கூட்டணிக்கான தொகுதி பங்கீட்டை அறிவித்தார்.

அதன்படி, பாஜகவிற்கு 27, அன்புமணி பாமகவிற்கு 18, அமமுகவிற்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டும் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *