பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருவதால் பாமக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பாமக தங்களுக்கு தான் சொந்தம் கொண்டாடி இருதரப்பினரும் மோதி வருகின்றனர். இதனால் எந்த பக்கம் செல்வது என்ற குழப்பத்திலும் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த மோதல் ஆரம்பம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞரணித் தலைவராக அறிவித்தார். இதற்கு மேடையிலையே அன்புமணி எதிர்ப்பு தெரிவிக்க மோதல் ஆரம்பம் ஆனது.

அடுத்த சில மாதங்களில் ராமதாஸ் தன்னை கட்சித் தலைவராக அறிவித்து, அன்புமணியை “செயல் தலைவர்” என்று அறிவித்தார். இது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று அன்புமணி அறிக்கை வெளியிட்டு, தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து மே 16ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் அழைத்த கூட்டத்தை அன்புமணி மற்றும் 200க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் புறக்கணித்தனர்.
இந்த நிலையில் இரு தரப்பும் நிர்வாகிகளை மாற்றி மாறி நீக்கி, கட்சியில் இரண்டு அமைப்புகள் உருவாகின. மாவட்டங்களில் இரு தலைவர்கள், இரு செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து இரு தரப்பிலும் தனது செல்வாக்கை நிரூபிக்க மாறி மாறி பொதுக்குழு கூட்டம் நடத்தினர். அதன் படி, ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள் கூறி விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு அன்புமணி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. தொடர்ந்து மேலும் 2 நாள் அவகாசமும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், முதல் முறையாக அனுப்பப்பட்ட விளக்க கடிதத்திற்கு எந்தவித பதிலும் வராததால், நிர்வாக குழு கூடி ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக பரிந்துரை செய்திருந்தது.
ஆனால், இன்னும் ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கலாம் என முடிவு எடுத்து 10ஆம் தேதி வரை அன்புமணிக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
இதற்கும் விளக்கம் கொடுக்கவில்லையென்றால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்கப்பட்டது. அதற்கு போக போக தெரியும் என பாடி, இந்த பாடலை எத்தனை நாட்களுக்கு தான் நான் பாடுவது என கேள்வி எழுப்பினார்.
பின்னர், பதில் அளிக்கவில்லையென்றால் ஒருங்கிணைப்பு குழு, நிர்வாக குழுவின் கருத்துகளை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
