Tamilnadu

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 9 நாள் போராட்டத்துக்கு பிறகு சிக்கிய கொலையாளி!

விளாத்திகுளம் அருகே நடந்த 12ஆம் வகுப்பு மாணவி கொலை வழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் 9 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், குற்றவாளி பிடிபட்டது முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கடந்த 10ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றபின் காணாமல் போனார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் புகார் அளிக்கப்பட்டது. 24 மணி நேரத்திற்கு பிறகு, காட்டுப்பகுதியில் காயங்களுடன் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் நடந்தது. இருப்பினும் ஆரம்பத்தில் எந்த தெளிவான ஆதாரமும் கிடைக்காமல் போலீசார் சிரமப்பட்டனர்.

பின்னர், காற்றாலை பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரமாக அமைந்தது. அதில் சந்தேகத்திற்கிடமான ஒரு இருசக்கர வாகனம் பதிவாகியுள்ளது. அதன் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, அந்த வாகனம் திருடப்பட்டது என்று தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில், அந்த வாகனத்தை பயன்படுத்தியவர் தர்ம முனீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டார்.

அவரை கைது செய்த போலீசார், தடயவியல் சோதனைகளின் மூலம் அவரது கைரேகை மற்றும் டிஎன்ஏ மாணவியுடன் பொருந்துவதை உறுதிப்படுத்தினர். இதனால் அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டதையடுத்து, போராட்டத்தில் இருந்த குடும்பத்தினர் மாணவியின் உடலை பெற சம்மதித்துள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *