Tamilnadu

காங்கிரஸ் தொகுதி தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்ல.. – எம்.பி.ஜோதிமணி பரபரப்பு பதிவு

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, எந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக இடையே ஆலோசனைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 5 தொகுதிகள் குறித்து விரைவில் பேசி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் 16 தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, வேட்பாளர் தேர்வு தொடர்பாக டெல்லியில் மேலதிக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எம்.பி. ஜோதிமணி அதிருப்தி தெரிவித்துள்ளார். கட்சிக்காக உழைக்காத சிலருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டுக்கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத் தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.


இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம்.

இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *