Tamilnadu

தமிழ்நாட்டில் இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடக்கம்- சூடுபிடிக்கும் தேர்தல் களம்

நாடு முழுவதும் ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இதற்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி அறிவித்தது. அதன் படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.

புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளன.

இந்த முறை திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன், விஜய் தலைமையிலான தவெக மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் களமிறங்குவதால், நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

இதனிடையே, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் மார்ச் 30 முதல் மனுக்கள் ஏற்கப்படுகின்றன.

மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஏப்ரல் 6 என்றும், பரிசீலனை ஏப்ரல் 7 மற்றும் திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 9 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1, 3, 5 ஆகிய நாட்களில் அரசு விடுமுறை காரணமாக மனு தாக்கல் செய்ய முடியாது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பாளர்களுடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வைப்புத் தொகையாக ரூ.10,000 மற்றும் ரூ.5,000 பணமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *