காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதனுடன் இணைத்து தனது மற்றும் தனது மனைவியின் சொத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளார். இருவரையும் சேர்த்து மொத்த சொத்து மதிப்பு ரூ.3.74 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீமானின் தனிப்பட்ட சொத்துகளைக் கணக்கில் எடுத்தால், கையிருப்பாக ரூ.50,000, வங்கி கணக்கில் ரூ.7.72 லட்சம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.19.50 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் தங்கம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவரின் மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.39.81 லட்சம் ஆகும். மேலும், அவருக்கு ரூ.5.11 லட்சம் அளவில் கடன் இருப்பதாகவும், 24 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஆனால் எந்த வழக்கிலும் தண்டனை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது மனைவியின் பெயரில் கையிருப்பு ரூ.35,000, வங்கி இருப்பு ரூ.5.27 லட்சம், ரூ.3.50 லட்சம் மதிப்பிலான பங்கு முதலீடு மற்றும் ரூ.29 லட்சம் மதிப்பிலான இரண்டு கார்கள் உள்ளன.
அதேபோல் ரூ.2.08 கோடி மதிப்பிலான 1,600 கிராம் தங்கமும் உள்ளது. மேலும், ரூ.87 லட்சம் மதிப்பிலான நிலங்களும் (வேளாண் மற்றும் வேளாண் அல்லாத) உள்ளன.
இவருக்கு ரூ.18.29 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
