ரயில்வே துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் விதிகளில் முக்கியமான மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி ரயில்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில் பயணிக்க, யுடிஐடி (UDID) எனப்படும் தேசிய தனித்துவ அடையாள அட்டை கட்டாய ஆதாரமாக பயன்படுத்தலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: இந்திய ரயில்வே இயக்கும் சாதாரண மற்றும் விரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாக சிறப்பு பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுவரை இந்த பெட்டிகளில் பயணிக்க, ரயில்வே வழங்கும் கட்டண சலுகை பாஸ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அந்த பாஸ் இல்லாத மாற்றுத்திறனாளிகள் சாதாரண பெட்டிகளில் டிக்கெட் வாங்கி பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் அவர்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தேசிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் யுடிஐடி அடையாள அட்டை பெற்ற அனைவரும் இனி இந்த சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம் என புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாஸ் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்தும் சிறப்பு பெட்டிகளை பயன்படுத்தலாம். பாஸ் இல்லாதவர்கள் சாதாரண டிக்கெட் வாங்கி, பயணத்தின் போது தங்கள் யுடிஐடி அட்டையை காண்பித்து சிறப்பு பெட்டிகளில் பயணிக்க அனுமதி பெறலாம்.
மேலும், அனுமதி இல்லாமல் இந்த சிறப்பு பெட்டிகளில் பயணிக்கும் பிற பயணிகள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை மாற்றுத்திறனாளிகளின் பயணத்தை எளிதாக்கும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
