வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை என்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில நீடிப்பதால் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், குறிப்பிட்ட படி நாளை முதல் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுசேரி மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.