ITamilTv

சிட்டிசன் திரைப்பட அத்திப்பட்டி போல் கிராமம் தனித்து விடப்பட்ட கிராமம் – இளைஞர்கள் வைத்த பேனரால் பரபரப்பு

Spread the love

திருவாரூர் மாவட்டம் 48 மணக்கரை ஊராட்சியில் வடவேற்குடி என்கிற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 240 குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்குள் நுழையும் வழியில் உள்ள பாலம் கைப்பிடிகள் இல்லாமலும் மிகவும் பழுதடைந்த நிலையிலும், ஊருக்குள்ள பல சாலைகள் மண் சாலைகளாக இருப்பதால் மழை நேரங்களில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதாகவும், இரவு நேரங்களில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லாத நிலை இருப்பதாகவும் அவற்றை சரி செய்ய தரவேண்டும் என்றும் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் குட்டைகள் சீரமைக்கப்படாமல் குப்பையாக இருப்பதாகவும், ஊருக்குள் உள்ள சுடுகாடு மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதாகவும் அதேபோன்று நியாய விலை கடைக்கு இப்பகுதியில் உள்ள மக்கள் செல்வதற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி இருப்பதாகவும் பாலம் சரியாக இல்லாததால் ஆற்று வழியாக குறுக்கு ரோட்டில் நடந்து செல்வதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் எனவே தங்கள் பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடையை கட்டித் தெ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பகுதி மக்கள் கடந்த வருடம் மே மாதம் ஐந்தாம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் மூன்று மாதங்களில் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்ததின் அடிப்படையில் அப்போது சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி படி நடந்து கொள்ளாத காரணத்தினாலும் சாலை மறியல் நடந்து 7 மாதங்கள் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக அப்பகுதி இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள அவலங்களை புகைப்படங்களாக எடுத்து அதை பேனரில் அச்சிட்டு அதனை ஊருக்கு வெளியில் இரண்டு பக்கமும் வைத்துள்ளனர்.

அப்பகுதி இளைஞர்கள் வைத்த இந்த பேனரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இனியும் அதிகாரிகள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராவிட்டால் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்


Spread the love
Exit mobile version