ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்(anbil mahesh) தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில், 3 ஆசியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இடைநிலை பதிவு ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கோரியும், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் கோரியும், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் ஆசிரியர் நியமனத்திற்கு போட்டித் தேர்வு நடத்துவதை ரத்து செய்ய கோரியும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 3 சங்கங்களை சேர்ந்தவர்களையும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு அழைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ்..
ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் NEET, JEE ஆகிய போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்த அவர்,
₹4.27 கோடி செலவினத்தைத் தவிர்த்திருக்கலாம் எனவும் 385 பயிற்சி மையங்களுக்கு தலா ₹55,000 செலவில் வாங்கப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள் 2018, 19 ஆகிய ஆண்டுகளில் 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் ₹3.18 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு வழங்கிய வழிகாட்டி புத்தகமும் பயன்படுத்தாததால், ₹2.15 கோடி செலவில் வழிகாட்டி புத்தகங்கள் மறுகொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.