ITamilTv

திமுகவுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க என்ன தகுதி இருக்கு?-அண்ணாமலை

Annamalai criticized

Spread the love

வெறும் வாய்வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசி, இத்தனை ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றி வரும் திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலும், கையாலாகாத்தனமுமே இதற்கு ஒரே காரணம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே உள்ளது வேங்கைவயல் கிராமம். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளன்று அந்தப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் தனிப்படை அமைத்து வெள்ளனூர் போலீசார் 75க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திகைத்து நின்றனர்.

இதனை தொடர்ந்து இந்தவழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னர் டி.என்.சோதனை செய்வது உள்ளிட்ட அறிவியல் ரீதியான தொழில்நுட்ப விசாரணை மேற்கொண்டும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாததால், இறையூர் மக்கள், வேங்கைவயல் மக்கள் தனித்தனியாக போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: ”வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு அலட்சியமா? ”கிராம மக்களின் திடீர் முடிவு!

இந்த நிலையில் தற்போது குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக வேங்கைவாசல் கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர். இதனால் மீண்டும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாமல், கண்துடைப்பு விசாரணை நடத்தி, கிட்டத்தட்ட அந்த சம்பவத்தைப் பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்க முயற்சித்து வருகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, வேங்கைவயல் மக்கள், தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

வெறும் வாய்வார்த்தைகளில் மட்டும் சமூகநீதி பேசி, இத்தனை ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றி வரும் திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலும், கையாலாகாத்தனமுமே இதற்கு ஒரே காரணம். வேங்கைவயல் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்தும், அங்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறக் கூட மனமில்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பட்டியல் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் திமுகவுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க என்ன தகுதி இருக்கிறது?

வாக்களிப்பது குடிமக்களின் ஜனநாயக உரிமை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, தேர்தலைப் புறக்கணிக்கவிருப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவித்திருப்பது, மிகவும் வருத்தத்திற்குரியது. வேங்கைவயல் மக்கள், மாற்றத்திற்காக வாக்களிக்க முன்வர வேண்டும். தங்கள் வாக்குகளின் வலிமையை திமுக அரசுக்கு உணர்த்துவதுதான் உண்மையான பதிலடியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version