Site icon ITamilTv

லண்டன் பயண ரகசியம்! விரட்டப்படுகிறாரா அண்ணாமலை? அமித்ஷா கொடுத்த அசைன்மென்ட்?

Annamalai London Travel Secret

Spread the love

தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பாஜகவை மையப்படுத்தி எழும் பேசுபொருள் அண்ணாமலையின் லண்டன் பயணம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai London Travel Secret) சர்வதேச அரசியல் என்ற தலைப்பிலான படிப்பு படிப்பதற்காக இங்கிலாந்துக்குச் செல்ல உள்ளார். இதனால், ‘அவர் வகிக்கும் மாநிலத் தலைவர் பதவி என்னவாகும்?’ என்ற கேள்வியே இந்த விடயத்திற்கு பலம் சேர்க்கும் கேள்வி.

ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றி வந்த அண்ணாமலை, கடந்த 2020ம் ஆண்டு பணியை விட்டுவிட்டு அரசியலில் குதித்தார். தமிழக பாஜகவில் இணைந்த அவர், எல்.முருகன் மத்திய இணையமைச்சர் ஆனதும், தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு வந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் இவர் தோல்வியை தழுவினாலும் மறுபுறம் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் போன்ற செயல்பாடுகள் மூலம் கட்சியை வளர்க்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

இவர் 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு அண்ணாமலை (Annamalai London Travel Secret) தோல்வியைத் தழுவியதை தொடர்ந்து தமிழக பாஜகவில் பல்வேறு சலசலப்புகள் நிகழ, சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் செவனிங் உதவித் தொகை மூலம் சர்வதேச அரசியல் என்ற தலைப்பிலான படிப்பைப் பயில அண்ணாமலை மூன்று மாதங்கள் இங்கிலாந்து செல்ல உள்ளார். அவரின் இந்தப் படிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அங்கு தங்கிப் படிப்பதற்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுள்ளது. அலுவல்பூர்வ தகவலாக வெளியாகும் தகவல் இதுவே.

இதையும் படிங்க : மாநில கல்வி கொள்கையை உருவாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 650 பக்க அறிக்கை சமர்ப்பிப்பு!

ஆனால், மறுபுறம்… சில பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களின் கருத்து மாறாக இருக்கிறது. அதாவது, அண்ணாமலை அவர்களின் செயல்பாடுகளில் திருப்தியடையாத, இன்னும் சொல்லப்போனால் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் உள்ள பாஜக தலைமை அவரை சிறிது காலம் எங்காவது கிளம்பி விடுங்கள் என்பது போல சொன்னதன் பின்னணியில் நிர்ணயிக்கப்பட்ட பயணம் என்று கூறுகின்றனர். மற்றொரு புறமோ அங்கு அவருக்கு சில அசைன்மென்டுகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் யூகிக்கின்றனர். இப்படியாக அண்ணாமலையின் லண்டன் பயண பின்னணியில் சில கேள்வி மற்றும் யோக விதைகள் தூவப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அதோடு மட்டுமல்லாமல், இந்தப் படிப்பிற்காக அவர் மூன்று மாதக் காலம் வெளிநாட்டுக்கு சென்றால், யார் பாஜக மாநில பொறுப்பை ஏற்றுக்கொண்டு வழிநடத்துவார்? என்ற கேள்விகள் அடுத்ததாக எழுந்துள்ளன. அடுத்த தலைவர் யார்? அப்படி வருபவர் தற்காலிக தலைவரா? அல்லது அடுத்த மாநில தலைவரா? அல்லது மாநில தலைமையின் நியமனத்தில் மத்திய தலைமையால் வேறு ஏதேனும் முடிவுகள் எடுக்கப்படுமா? என்ற கேள்விகள் கமலாலய வட்டாரத்தை சுழன்றடிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் தமிழக பாஜக வட்டாரத்தில் உள்ள மற்ற சில மூத்த தலைவர்களின் மூவ்மெண்டுகளும் அரசியல் ஆய்வாளர்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் நடக்கும் நகர்வுகளை…


Spread the love
Exit mobile version