Selvaperundagai : பிரதமர் மோடியின் அரசமைப்புச் சட்ட விரோத மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு தொடர்ந்து பேச பேச பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதியாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது..
“மக்களவைத் தேர்தலின் முதல், இரண்டாம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தினாலும் பிரதமர் மோடி அடிப்படை உண்மைகளுக்கு புறம்பாக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை தேர்தல் பரப்புரையின் போது பேசி வருகிறார்.
நேற்று மும்பையில் உரையாற்றும் போது, நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்கமாட்டேன் என்று பேசியிருக்கிறார்.10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு இட ஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல.
சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அந்தந்த மாநில அரசுகள் அமைக்கும் பின்தங்கியோர் ஆணையம் வழங்குகிற தரவுகளின்படி அந்தந்த மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குகின்றன.
இதையும் படிங்க : MGR திரைப்பட கல்லூரி மாணவர் சேர்க்கை – மே 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
இந்த அடிப்படையை புரிந்து பேசுகிறாரா? அல்லது திட்டமிட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறாரா என்று தெரியவில்லை.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம் மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
உண்மை நிலை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சி பின்தங்கியோரின் இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க சதித் திட்டம் தீட்டுகிறது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி இந்தியாவின் கோயபல்ஸ் ஆக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதுகுறித்து பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, போன்றவற்றின் காரணமாக மக்களிடையே பா.ஜ.க. மீது கடுமையான எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது.
வடமாநிலங்களில் பா.ஜ.க. எதிர்ப்பு அலை தலை தூக்கியிருக்கிறது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டை கொள்ளையடிப்பார்கள் என்று கூறுகிறார் பிரதமர் மோடி.
நாட்டிலுள்ள சொத்துக்களை எல்லாம் 20, 25 கோட்டீஸ்வரர்கள் 45 சதவிகித மொத்த சொத்துகளை கொள்ளையடிப்பதற்கு துணை போனவர் இப்படி பேசுவது விந்தையாக இருக்கிறது.
இதன்மூலம் தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திர நன்கொடை மூலம் ரூபாய் 8,000 கோடி கொள்ளையடித்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
எனவே, 2024 மக்களவைத் தேர்தல் என்பது இந்திய மக்களுக்கு வாழ்வா? சாவா? என்பதே பிரச்சினை. இந்தியாவின் எதிர்காலமே மக்களவை தேர்தல் முடிவை பொறுத்திருக்கிறது.
இந்தியாவில் சர்வாதிகார, பாசிச, மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமெனில் பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிகமிக அவசியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது. மோடி எத்தகைய கபட நாடகத்தை ஆடினாலும் கடந்த 2014, 2019-ல் மக்கள் ஏமாந்ததைப் போல 2024-ல் மக்களை ஏமாற்ற முடியாது.
மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்தியா என்ன ஆகும் என்ற பயம் மக்களிடையே ஏற்படுவதற்கு அவரது உரைகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
பிரதமர் மோடியின் இத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு தொடர்ந்து பேச பேச பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதியாகும்” எனக் கூறி உள்ளார் Selvaperundagai.
இதையும் படிங்க : விஐடி நுழைவுத் தேர்வில் பல்கலைக்கழக சர்வரை ஹேக் செய்து பதில் அளித்த மாணவர்கள்