Site icon ITamilTv

மயான பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்த தமிழக அரசு..!

Spread the love

மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்யும் மயான பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படை பணியாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் ஏற்கனவே முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முக்கிய தொழிற்சாலைகள், பள்ளி ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி இலவசமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்த வகையில் கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் மயானப் பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக மத்திய அரசின் ஆணைப்படி, மயானப் பணியாளர்கள் மத்திய அரசின் முன்களப் பணியாளர்களின் பட்டியலில் இல்லாவிடினும் 18 வயதிற்கு மேல் உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும், கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் மயானப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version