ITamilTv

”பாஜக ஊழல்களை CAG அறிக்கை..” பிரதமர் ஏன் வாயைத் திறக்கவில்லை ?- கேள்விகளால் விளாசிய முரசொலி!!

Spread the love

பா.ஜ.க. அரசின் ஊழல்களை சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஒன்றிய அரசு ஏன் வாயைத் திறக்கவில்லை, பிரதமர் பதில் என்ன?’ என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.

பாரத்மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம், சுங்கச் சாவடிக் கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புர அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் ஆகிய ஏழு திட்டங்கள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கை வெளியானது. ஊழல்களை அம்பலப்படுத்திய இந்திய கணக்குத் தணிக்கைத் துறையின் மூன்று முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தணிக்கை உள்கட்டமைப்பின் முதன்மை இயக்குநர் அதூர்வ சின்ஹா, தணிக்கைத்துறை பதிவாளர் தத்தபிரசாத் சூர்யகாந்த் ஷிர்சாத் மற்றும் அசோக் சின்ஹா ஆகியோரை ஒன்றிய அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் வெவ்வேறு துறைகளுக்கு பணியிடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

அதூர்வ சின்ஹா, இப்போது இருக்கும் பொறுப்புக்கு கடந்த மார்ச் மாதம்தான் வந்திருக்கிறார். அவரை கேரள மாநில கணக்காளர் ஜெனரலாக தூக்கி அடித்திருக்கிறார்கள். சூர்யகாந்த், இயக்குநர் – சட்டம் என்ற பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். வடக்கு மத்திய மண்டல இயக்குராக அசோக் சின்ஹா, இயக்குநர் – தேசிய மொழிகள் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும்தான் முன்பு வெளியான தணிக்கைத் துறை அறிக்கையைத் தயார் செய்தவர்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஒன்றிய அரசுத் துறை அலுவலர்கள் சொல்லி வருகிறார்கள்.

மழைக்காலக் கூட்டத் தொடரின் இறுதி நாளான ஆகஸ்ட் 12 அன்று இந்த அறிக்கைகள் வெளியாகின. செப்டம்பர் 12-ல் இவர்கள் மூன்று பேரும் தூக்கியடிக்கப்பட்டு விட்டார்கள்.

“ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊழல்களை அம்பலப்படுத்திய இந்திய தணிக்கைத்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில், ஒன்றிய அரசு அவர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “மோடி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் எவரையும் மிரட்டி அச்சுறுத்துதல் அல்லது அவர்களை பதவியில் இருந்தே நீக்குதல் என்பதே பா.ஜ.க.வின் தொடர் நடவடிக்கையாக உள்ளது. சி.ஏ.ஜி. அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, துவாரகா விரைவுச் சாலை, பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் தொடர்பான, மெகா ஊழல்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பா.ஜ.க. அரசின் ஊழல்களை யாரேனும் வெளிக்கொண்டு வந்தால் அவர்களை அச்சுறுத்தும் மாஃபியா போன்று, மோடி அரசு செயல்பட்டு வருவதாகவும், இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 3 தணிக்கை அதிகாரிகளின் இடமாற்றம்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் 7.5 லட்சம் பயனாளிகள் ஒரே செல்போன் மூலமாக இணைக்கப்பட்டுள்ளார்கள். இறந்தவர்களுக்கு சிகிச்சை கொடுத்ததாக கணக்கு உள்ளது. இறந்த பிறகு 2 லட்சத்து 14 ஆயிரத்து 923 காப்பீட்டுக் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 22 கோடியே 44 லட்சம் ரூபாயை தகுதியில்லாதவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

துவாரகா விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 18 கோடியாக இருந்த செலவு 250 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பை விட 278 மடங்கு கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை சொல்கிறது.

அயோத்தியில் ராமாயணம் தொடர்புடைய இடங்களை நவீனப்படுத்த ஒரு திட்டம் போட்டுள்ளார்கள். இந்தத் திட்டத்தில் ஒப்பந்தகாரர்களுக்கு விதிமுறைகளை மீறி தேவையற்ற சலுகைகள் தரப்பட்டுள்ளது.

பாரத்மாலா திட்டத்தின் படி ஒரு கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலை அமைக்க 15.37 கோடி செலவு செய்ய வேண்டும். ஆனால் இரண்டு மடங்கு அதிகமாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 600 சுங்கச்சாவடிகள் உள்ளன. 5 சுங்கச்சாவடிகளை மட்டும் தணிக்கை செய்ததில், விதிகளுக்குப் புறம்பாக வாகன ஓட்டிகளிடம் இருந்து 132 கோடியே 5 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பரனூர் சாவடியில் 6 கோடியே 54 லட்சம் ரூபாய், பொதுமக்களிடமிருந்து முறைகேடாக வசூலிக்கப் பட்டுள்ளது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான எந்திரம் வடிவமைப்பில் 159 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஆகிய ஊழல்களை சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தி இருந்தது. பா.ஜ.க. அரசின் ஊழல்களை சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார். ‘ஒன்றிய அரசு ஏன் வாயைத் திறக்கவில்லை, பிரதமர் பதில் என்ன?’ என்று ‘இந்தியா கூட்டணிக் கட்சிகள் கேள்விகள் எழுப்பின. அதற்கு பா.ஜ.க. பதிலளிக்கவில்லை..


Spread the love
Exit mobile version