Site icon ITamilTv

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம்: `சிபிஐ கூற்று அபத்தம்’ – கேம்பஸ் ஃப்ரண்ட் தலைவர் கண்டனம்..!

Spread the love

சென்னை ஐஐடியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ சொல்லும் கூற்று அபத்தமானது என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் அஷ்ரப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்;

சென்னை ஐ.ஐ.டியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று பாத்திமா லத்தீஃப் என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மாணவியின் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என கேம்பஸ் ஃப்ரண்ட் உட்பட பல்வேறு மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியதன் அடிப்படையில், வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. வழக்கு மாற்றப்பட்ட பிறகும் மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களும், செல்போன் பதிவில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்விளைவாக பாத்திமா லத்தீஃப் வழக்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ டிசம்பர் 27 ஆம் தேதி 174 என்ற குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டு தற்போது சி.பி.ஐ வழக்கை நிறைவு செய்துவிட்டது.

இந்நிலையில் மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “பாத்திமா தற்கொலை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை முடிக்கப்பட்டுள்ளது என சி.பி.ஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டை பிரிந்திருந்த காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி பாத்திமா தற்கொலையில் ஈடுபட்டதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது. இது ஏற்புடையதல்ல. சி.பி.ஐ இந்த வழக்கை முடித்தாலும், நாங்கள் இதை விட மாட்டோம். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்” என்று கூறினார்.

சென்னை ஐ.ஐ.டி உட்பட இந்தியாவில் இருக்க கூடிய அத்தனை ஐ.ஐ.டியிலும் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் தான் சென்னையிலும் நிகழ்ந்த இச்சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாத்திமா லத்தீப் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாற்ற கோரி குரல்கள் எழுந்தன. ஆனால், அதற்கு மாற்றாக தற்போது சி.பி.ஐ கூறியிருக்கும் செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ மத்திய பாசிச பாஜக அரசிற்கு துணை போகிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிவில் கூறப்பட்டுள்ளதை கேம்பஸ் ஃப்ரண்ட் அநீதியாகவே பார்க்கிறது. பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு “தன்னுடைய தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன பத்மநாதன் (இஸ்லாமோஃபோபியா) மத ரீதியாக துன்புறுத்தியதே முழு காரணம் என்று தன்னுடைய மொபைலில் பதிவிட்டிருந்தார்.

” இதையெல்லாம் தவிடுபொடியாக்கி அப்பட்டமாக பா.ஜ.க அரசின் துணையோடு உயர்ஜாதி வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் பேராசிரியர் சுதர்சன பத்மநாதனை காப்பாற்றும் வேலையை சி.பி.ஐ செய்துள்ளது ஒருபோதும் ஏற்புடையதல்ல. சாதாரண பள்ளி, கல்லூரிகளில் நிகழும் இது போன்ற தவறுகளுக்கு எடுக்கும் நடவடிக்கைகள் கூட ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பார்ப்பன உயர்சாதி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாமிய வெறுப்பை கக்கும் போது மீது இதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையும் சென்னை உள்ளிட்ட எந்த ஒரு ஐ.ஐ.டிகளிலும் எடுக்காதது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.

எனவே, இந்த வழக்கில் நீதி என்பது தனியாக சிறப்பு குழு ஒன்றை அமைத்து சென்னை ஐ.ஐ.டியின் பேராசிரியர் சுதர்சன பத்மநாதன் உட்பட சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும். மீண்டும் இந்நிகழ்வு நடைபெறாதவாறு சிறப்பு குழுக்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஐ.ஐ.டியிலும் அமைக்க வேண்டும், பாத்திமா லத்தீஃப் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் மீண்டும் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா மிகப்பெரும் மாணவர் போராட்டத்தை முன்னெடுக்கும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version