Site icon ITamilTv

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு – ராமதாஸ்!!

Metro project

Metro project

Spread the love

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு (census) நடத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது..

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு (census) நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டு கால கோரிக்கை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1881ம் ஆண்டில் தொடங்கி 1931ம் ஆண்டு வரை ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்படாத நிலையில், அப்போதிலிருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகான கோரிக்கைகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகிய தாங்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலையையே எடுத்து வந்திருக்கிறீர்கள். அத்தகைய கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தும் என்று எண்ணி காத்திருப்பதா? தமிழ்நாடு அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதா? என்பது தான் நமக்கு இடையே உள்ள மாறுபட்ட கருத்து நிலைப்பாடுகள் ஆகும்.

இதையும் படிங்க : https://itamiltv.com/vijayakanth-is-a-wonderful-person-beyond-politics-and-screen-life-he-showed-love-to-everyone-anbumani-political-news/

சமூகநீதியைக் காக்க இந்தியா முழுவதும் 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த அக்டோபர் 21ம் நாள் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் தேவை குறித்தும் அதில் குறிப்பிட்டிருந்தீர்கள். அவற்றில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.

தேசிய அளவில் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதை பாட்டாளி மக்கள் கட்சியும் ஆதரிக்கிறது. அதற்கான பல்வேறு தருணங்களில் பாமக குரல் கொடுத்திருக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதால், மாற்று ஏற்பாடாக மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்படி பாமக வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க : https://itamiltv.com/tamil-nadu-govt-should-conduct-caste-wise-census-ramdas-urges-to-cm/

2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி, இந்தியப் பிரதமருக்கு தாங்கள் கடிதம் எழுதி 70 நாட்களாகி விட்ட நிலையில், அதுதொடர்பாக மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை.

அதேநேரத்தில், பிரதமரும், மத்திய உள்துறை மந்திரியும் பல்வேறு மேடைகளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராக பேசி வருகின்றனர். அதனால் தான், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவை கடந்த காலங்களில் இருந்ததை விட இப்போது அதிகரித்திருக்கிறது. தமிழகத்தின் சமூகநீதி சிறப்புகளில் முதன்மையானது 69% இட ஒதுக்கீடு ஆகும். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2010ம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ”69% இடஓதுக்கீடு செல்லும்; ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும்” என்று ஆணையிட்டது.

இதையும் படிங்க : https://itamiltv.com/heavy-rain-expected-on-december-31-january-1/

ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 69% இடஓதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாவிட்டால், 69% இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது என்பது தான் உண்மை.

நாடாளுமன்றத்தில் 2008ம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தின்படி (The Collection of Statistics Act, 2008) தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே அதன் பணியாளர்களைக் கொண்டு நடத்த முடியும். சுமார் ஒரு மாத அவகாசத்தில் ரூ.300 கோடி செலவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மிக எளிதாக நடத்த முடியும்.

அதனால், இன்றைய சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தடைகள் இல்லை. எனவே, தமிழ்நாட்டின் தேவையையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும். அதற்கான கால அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என கோருகிறேன்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.” எனக் கூறியுள்ளார்.


Spread the love
Exit mobile version