Site icon ITamilTv

காவிரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்திடுக – ஜி.கே.வாசன்!!

Spread the love

விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க, கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்திரவுபடி, காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்திருப்பதாவது..,

“கர்நாடகா அரசு கடந்த மாதம் காவிரி மேலாண்மை ஆணையத்தால் கூட்டப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட உத்தரவுகளை ஏற்காமல் தொடர்ந்து நிராகரித்துள்ளது. நேற்று டெல்லியில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தமிழக விவசாயத்திற்கு வரும் 23ம் தேதி வரை தினமும் 2,600 கன அடி காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை நிறைவேற்ற காவிரி மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளின் தற்பொழுது உள்ள நிலையை ஆராய்ந்து உண்மை தன்மைக்கு ஏற்றவாறு தன்னிச்சை அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையமே உரிய ஆலோசனை செய்து நேரடியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

தமிழகம் பெரிதும் நம்பியிருக்கும் வடகிழக்கு பருவமழை கூட சரியாக பெய்யாமல் குறைவாகவே இருப்பது துரதிர்ஷ்டம். ஆகவே தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க காவிரி மேலாண்மை ஆணையம் மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Spread the love
Exit mobile version