ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்த 3 தினங்களிலேயே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது சென்னை மாநகர காவல்துறை!
எப்போது தேர்தல் வந்தாலுமே அதற்கான தேதி அறிவிக்கப்பட்ட அக்கனமே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வருவது வழக்கம். தேர்தல் முடியும் வரை அமுலில் இருக்கும் அந்த விதிகளின் படி அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவுறுத்தப்படும், மேலும், ‘அந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப் படுகிறதா?’ என்பதை கண்காணிக்க உதவி தேர்தல் அலுவலர்கள் முதல் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரை பலரும் பறக்கும் படை போல சுற்றி வருவார்கள்.
தற்போது நடைபெறவுள்ள 18-வது மக்களவை தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள பல நடத்தை விதிமுறைகளின் படி, “போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அமைதி மற்றும் ஒழுங்கைப் பேணவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய காவல்துறைக்கு ஏதுவாக, கட்சி அல்லது வேட்பாளர், சந்திப்பு அல்லது பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தை அரசியல் கட்சிகள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் தெரிவிக்க வேண்டும்” என்பதும் ஒன்றாகும்.
இந்நிலையில்தான், பிரேமலதா விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் ஒரு பெண்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்சிக்கு நேற்று (18.03.2024) ஏற்பாடு செய்திருந்தார் அக்கட்சியின் தொழிற்சங்க செயலாளரான காளிராஜ்.
இதையும் படிங்க: மக்களவை தேர்தல் – தேமுதிக விருப்ப மனு விநியோகம்
பொதுவாகவே, விஜயகாந்த் மறைவிற்கு பிறகு அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால், விஜயகாந்தின் நினைவிடத்தை காண வரும் பொதுமக்களின் கூட்டம் கோயம்பேடு பகுதியில் அதிகமாக இருக்கும். மதிய நேரத்தில் அங்கு வருபவர்களுக்கு சைவ உணவு அன்னதானமாக போடப்படுவதும் வழக்கம்.
அப்படி இருக்கும் போது, வழக்கத்தை விட அப்பகுதியில் கூட்டம் அதிகமாக இருப்பதை கண்ட கோயம்பேடு பகுதியின் உதவி தேர்தல் அலுவலர் ஒருவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று பார்த்த போதுதான், நினைவிடத்தின் கேட்டை தாண்டியதும் பிரியாணி வாசத்தை உணர்ந்திருக்கிறார் அவர். இதனால், “தேர்தலுக்கு முன்பே வாக்காளர்களுக்கு விருந்தா..?” என அதிர்ச்சியான அவர், உள்ளே சென்று பார்த்த போதுதான் மண்டபத்தில் உள்ள மேடையில் இருந்த பிரேமலதா அங்கு வந்திருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.
பலரும் தேமுதிகவின் சின்னம் பதித்த மஞ்சள் கலர் சேலையில் வந்திருந்து இருக்கிறார்கள். விசாரித்த போதுதான், தங்கள் பகுதியில் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் பெண்களை தேர்ந்தெடுத்த தேமுதிக மகளிர் அணியினரும் தொழிற்சங்கமும் அவர்களுக்கு தொழிற்சங்கத்தின் சார்பாக எம்ப்ராய்டரி மற்றும் தையல் வகுப்புகளில் கலந்து கொள்ள அங்கு டோக்கன் வினியோகம் நடந்து கொண்டிருந்ததையும் கண்டு பிடித்திருக்கிறார் அந்த உதவி தேர்தல் அலுவலர். தவிர, அந்த பகுதியில் பந்தல் போட்டு சுமார் 5 ஆயிரம் பேருக்கு பிரியாணியும் பரிமாறப்பட்டுக் கொண்டு இருந்ததால், அங்கும் அதிகமானோர் கூடி இருந்தனர்.
எனவே, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், இது போன்ற கூட்டங்களைக் கூட்டும் போது காவல் துறையிடம் அவசியம் அனுமதி பெற வேண்டும் என்பதை பிரேமலதா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்திய தேர்தல் அலுவலர், இது அனைத்தையும் தன்னுடன் அழைத்து வந்த வீடியோகிராபர் மூலம் பதிவும் செய்து கொண்டார். மேலும், இது தொடர்பாக கோயம்பேடு கே-11 காவல் நிலையத்தில் புகாராகவும் அளித்தார் உதவி தேர்தல் அலுவலர்.
அதன் அடிப்படையில் விசாரித்த போலீசார், அதன் அடிப்படையிலும், உதவி தேர்தல் அலுவலர் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையிலும், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தொழிற்சங்க செயலாளர் காளிராஜ் ஆகியோர் மீது அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டுவது, அனுமதி பெறாமல் பந்தல் போடுவது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது ஆகிய குற்றங்களுக்காக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இதுவரை யாருடனும் கூட்டணியை உறுதி செய்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதன்முதலில் தேர்தல் கால வழக்கு வாங்கிய அரசியல் தலைவர் என்ற முறையிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.