Site icon ITamilTv

பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்!!

Spread the love

உண்மையிலேயே மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற அக்கறை தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், மதுவுக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையங்களை அமைத்து, மதுக்கடைகளின் எண்ணிக்கையினை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பதாவது..,

2016 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மதுவால் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் மேடைக்கு மேடை முழங்கிய கட்சி தி.மு.க.

2021 ஆம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், மதுவுக்கு அடிமையானவர்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபடவும், படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு கடந்த இரண்டரை ஆண்டு காலமாக எடுத்து வருகிறது. மதுக்கூடம் உரிமம் வழங்க ஒப்பந்தப்புள்ளி, மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல், சட்டவிரோத மதுக்கூடங்கள், மது விற்பனைக்கு இலக்கு என மதுவை ஊக்குவிக்கும் செயல்கள் தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் மதுக் கடைகளில் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாக தமிழ்நாடு மதுவிலக்குத் துறை அமைச்சர் அவர்கள் தற்போது கூறியிருக்கிறார். ஒரே ரக மதுபானங்கள் கொடுக்கும்போது, ‘ஏன் ஒரே ரகத்தை மட்டும் கொடுக்கிறீர்கள். மற்ற ரகம் தருவதில்லை’ என மதுப்பிரியர்கள் கேட்பதாகவும். அவர்களின் விருப்பத்திற்கேற்ப என்னென்ன ரகம் வருகிறதோ அவற்றை குடிமகன்களுக்கு வழங்குவதாகவும் மதுவிலக்குத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.

அமைச்சர் அவர்களின் நடவடிக்கையினைப் பார்த்தால், மதுப்பழக்கத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையை எடுப்பதுபோல்தான் தெரிகிறதே, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாகத் தெரியவில்லை. அதே சமயத்தில். மதுப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்று கூறி இருக்கிறார். இந்தப் பேச்சு வெறும் பெயரளவில் மட்டும்தான் இருக்கிறதே தவிர, செயலில் இல்லை என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது.

மதுவிலக்கு குறித்த கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கை குழந்தையையும் கிள்ளிவிட்டு. தொட்டிலையும் ஆட்டும் கதையாக உள்ளது. அனைத்திலுமே இரட்டை வேடம்தான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு கொள்கை. ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு கொள்கை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்கள்மீது அக்கறை உள்ளதுபோல நடித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, கடன் என்றெல்லாம் காரணம் காட்டி மக்கள்மீது கூடுதல் சுமையை திணிப்பதுதான் தி.மு.க.வின் வாடிக்கை.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து டாஸ்மாக் மூலம் அரசுக்கு வரும் வருவாய் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதுதான் யதார்த்தம். பண்டிகைக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் மதுவின் விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத்தான் தி.மு.க. அரசு எடுத்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது ஒருபக்கம் என்றால். மறுபக்கம் கள்ளச்சாராயம் களைகட்டுகிறது.மொத்தத்தில், தி.மு.க. அரசின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுவது ஏழை. எளிய மக்களே.

உண்மையிலேயே மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற அக்கறை தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால். மதுவுக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையங்களை அமைக்கவும், மதுக்கடைகளின் எண்ணிக்கையினை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கினை அமல்படுத்தவும், முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும். மது ஊக்குவிப்பை உடனடியாக கைவிட வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version