Site icon ITamilTv

”மனிதநேயத்திற்குச் சொந்தக்காரர் நபி..” இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்!!

Spread the love

மீலாது நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நம்பிக்கைக்குரியவர்”. “அடைக்கலம் அளிப்பவர்”, “வாய்மையாளர்” எனப் பொருள்படும். “அல் அமீன்” எனும் சிறப்புப் பெயர்கொண்டு அவர்மீது அன்பு கொண்ட பொதுமக்களால் அழைக்கப்பட்ட நபிகள் பெருமானார், ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கினார்.

“ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்” என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரரான அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை மட்டுமின்றி. அவை பொன்னேபோல் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை!

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்தநாளாகிய “மீலாதுன் நபி” நன்னாளை இஸ்லாமிய மக்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக முதன்முதலாக, தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் முதன்முதலாக ஆட்சிப் பொறுப்பேற்ற 1969-ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை நாளாக அறிவித்துச் செயல்படுத்தினார். ஆனால், அந்த மீலாதுன் நபி நாள் விடுமுறையை 2001-இல் அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது. திராவிட முன்னேற்றக் கழக அரசு மீண்டும் 2006-இல் அமைந்தவுடன், மீலாதுன் நபித் திருநாளுக்கு “அரசு விடுமுறை” வழங்கியது.

என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் உற்ற தோழனாக உரிமைப் பாதுகாவலனாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான், அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியர்க்கு மூன்றரை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை நல்கி, தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version