ITamilTv

ஒரு வகுப்பு வாத சம்பவம் கூட நடக்கக்கூடாது.. கர்நாடக காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை!!

Spread the love

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு முதல் காவல்துறை கூட்டமாக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி கே சிவகுமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் உடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் சித்த ராமையாவும், துணை முதல்வர் டி கே சிவகுமாரும் கடும் எச்சரிக்கை விடுத்தனர். காவல் படையை காவி நிறம் ஆக்குவதை உடனடியாக நிறுத்துங்கள் என்று முதல்வர் சித்தராமையா எச்சரித்தார்.

முந்தைய பாஜக ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக இருந்ததாக கருதப்பட்ட அதிகாரிகளை துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் கடுமையாக விமர்சித்தார். ஏன் இந்த கூட்டத்திற்கு காவி நிறத்தில் நீங்கள் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவிக்கு மேல் உள்ள 30க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் கடந்த நான்கு ஆண்டுகளாக கர்நாடகா காவல்துறையினர் பாஜகவின் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.

பாஜக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியினரிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் தங்களிடமே இவ்வாறு நடந்து கொண்ட நீங்கள் குறைகளுடன் வரும் சாமானிய மக்களிடம் எப்படி நடந்து கொள்வீர்கள் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரசுக்கு எதிராக மாதிரி நடத்தை விதிகளை மீறிய பல வழக்குகளை காவல்துறையினர் தாக்கல் செய்ததாகவும், ஆனால் பாஜகவுக்கு எதிராக பல வழக்குகளை பதிவு செய்யாமல் விட்டுவிட்டதாகவும் சிவகுமார் குறிப்பிட்டார்.

விஜயபுரா, பாகல் கோட் மற்றும் உடுப்பியில் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மத நிகழ்வுகளின் போது காவி உடை அணிந்த காவலர்களின் நடமாட்டத்தையும் பி கே சிவகுமார் உதாரணமாக சுட்டி காட்டினார்.

இது போன்ற வெளிப்படையான சித்தாந்தத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கர்நாடகாவில் ஒரு வகுப்புவாத சம்பவம் கூட இனி நடைபெறக் கூடாது என்றும் அவர் அதிகாரிகளை எச்சரித்தார்.

சமூக விரோதிகளை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்கும் என்றும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டார்.வலதுசாரி குழுக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் அதிகாரிகளுக்கு இனி “இரக்கம் காட்டப்பட மாட்டாது “என்றும் துணை முதல்வர் டி கே சிவகுமார் அப்போது உறுதிப்பட தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Spread the love
Exit mobile version