ITamilTv

மகாராஷ்டிரா கிரேன் விபத்து : உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு..

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் கட்டுமானப் பணியிடத்தில் கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த திரு.சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த திரு.கண்ணன் (வயது 23) என்றும் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் பொதுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் மேற்கொண்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .


Spread the love
Exit mobile version