Site icon ITamilTv

தீயணைப்போர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Spread the love

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30.6.2023) தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பா. இருசம்மாள் அவர்களுக்கும், தீயணைப்போர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 120 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையானது “காக்கும் பணி எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவுகளை ஏற்படுத்தும் தீவிபத்துகளிலிருந்து உயிர்களையும், டைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளிலிருந்தும், பிற பேரிடர்களிலிருந்தும் மக்களை காப்பதும், அவசர உதவி புரிவதும் இத்துறையின் முக்கிய பணியாகும்.

தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது செயல்படும் இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் அமைத்தல், பணியாளர்களுக்கு குடியிருப்புகளை கட்டுதல், புதிய வாகனங்களை கொள்முதல் செய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் (Group-1) பணியிடத்திற்கு பா. இருசம்மாள் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைத்தால் தீயணைப்போர் பணியிடத்திற்கு 120 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலருக்கு 4 மாத நிறுவனப் பயிற்சியும், தீயணைப்போருக்கு 3 மாத அடிப்படை பயிற்சியும் தாம்பரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாநில பயிற்சி மையத்தில் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Spread the love
Exit mobile version