ITamilTv

உக்கிரமான காவிரி போராட்டம்! தமிழக பேருந்துகள் அத்திப்பள்ளி வரை இயக்கம் – பெங்களூருவில் பதற்றம்!

Spread the love

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் கர்நாடகாவுக்கு செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கும் கர்நாடாகவுக்காவுமான தண்ணீர் பிரச்சனை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் போதிய நீர் இல்லை என கூறி கர்நாடக அதற்கு மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், தமிழகத்துக்கு காவிரிநீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கன்னட அமைப்புகள் சார்பில் இன்று காலை 6 மணி முதல்மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு உணவக உரிமையாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் உள்ளிட்ட 150 அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக சில தனியார் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ளன. தமிழக பதிவு எண் கொண்ட லாரி, சரக்கு வாகனங்கள் கர்நாடகாவுக்கு செல்வதை தவிர்க்குமாறு லாரி உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

அதே போல் தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அத்திப்பள்ளி சோதனைச் சாவடி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள‌து.


Spread the love
Exit mobile version