திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு இடுவம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பொது சுடுகாட்டில், விஜயன் என்பவர் 25 ஆண்டுகளாக உடல்களை புதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 200 குடும்பங்கள் மட்டுமே அங்கு வசித்து வந்த நிலையில், தற்போது 3000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஜனத்தொகை அதிகரிப்பால் வாரத்தில் 4 முதல் 5 சடலங்கள் இந்த சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுவதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், உடல்களை புதைக்க இடம் இல்லாததால் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட உடல்களை வெளியே எடுத்து போட்டு புதிய உடலை புதைத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், சிதிலமடைந்த உடல்கள் சுடுகாட்டில் பரவிக் கிடப்பதால் நாய்கள் அந்த சடலங்களை வெளியே இழுத்துச் சென்று போடும் நிலை உள்ளது. அழுகிய நிலையில் உள்ள அந்த உடல்களை நாய்கள் பொதுமக்கள் வாழும் பகுதிக்கு இழுத்து வந்து போடுவதால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெண்கள் குழந்தைகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொது வெளியில் கிடந்த சடலத்தை மீண்டும் புதைக்க உத்தரவிட்டனர். அதையடுத்து, அழுகிய உடல் மீண்டும் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து சுடுகாட்டில் பணியாற்றும் விஜயன் கூறுகையில்..
“சுடுகாட்டில் பெரும் பகுதி செடி கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புதராக மாறி உள்ளது. இதனை அப்புறப்படுத்த தனக்கு எந்த விதமான உதவியும் கிடைக்காததால் சிறிதளவு இடத்தில் மட்டுமே சடலங்களை புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், எனக்கு இந்த பகுதியில் தங்கும் அறை இல்லாததால் நான் வெளியே சென்று தங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் சுடுகாட்டை பராமரிக்க முடியவில்லை. எனக்கு தனி அறை அமைத்துக் கொடுத்து, இங்குள்ள புதரை நீக்கி கொடுத்தால் இந்த பகுதியை முறையாக பராமரித்துக் கொள்வேன்” என கூறியுள்ளார்.