DMK alliance | திமுகவுடன் தொட்ரந்து கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவடையாமல் இருக்கும் நிலையில், அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக நூல் விட்டுப் பார்ப்பதாக வரவும் தகவல்கள் அரசியல் களத்தை அதகளப்படுத்தி வருகின்றன.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தேனி பாராளுமன்ற தொகுதி தவிர, மற்ற 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் தான் போட்டியிட்ட 20 தொகுதியிலுமே 33.5 சதவீத வாக்குகளோடு வெற்றியை ஈட்டியது திமுக. ஆனால், இந்த முறை திமுக கூட்டணியில் முதலில் 12 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதாகவும், திமுக அதற்கு மறுப்பதே கூட்டணி தாமத்திற்கு காரணம் எனவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஓ.பி.எஸ்.சுக்கு வைக்கப்பட்ட செக்..?- சுசகமாக பேசிய வானதி சீனிவாசன்!
தற்போது கடந்த முறையைப் போல அதே எண்ணிக்கையாவது வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது காங்கிரஸ். ஆனால், திமுக அதற்கும் ஒப்புக்கொள்ள மறுப்பதே கூட்டணி சுனக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால், அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருக்கிறது திமுக – காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு வார்த்தை.
அதே போல, கடந்த தேர்தலில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில், சிதம்பரம் தொகுதியில் பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கட்சித்தலைவரான திருமாவளவன்.
இதனால் தற்பொழுது, 2 தனித்தொகுதிகளோடு 1 பொதுத்தொகுதியும் இம்முறை தர வேண்டும் என திமுகவோடு நடந்த 2 கட்ட கூட்டணிப் பேச்சு வார்த்தையிலும் வலியுறுத்தி இருந்தது விசிக. ஆனால், திமுகவோ கடந்த முறையைப் போலவே 2 தொகுதிகள் மட்டும் தான் என கூறியதாகவும், கூடுதல் தொகுதி ஒதுக்கப்பட்டால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிகிறது. இதனால், விசிக உடனான தொகுதிப் பங்கீடும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு 1 மக்களவை தொகுதியும், 1 ராஜ்யசபாவும் ஒதுக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட கனேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று எம்.பி.ஆனார். ஆனால், இம்முறை தனது மகன் துரை வையாபுரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரையும் களமிறக்க முடிவு செய்துள்ள வைகோ, அதற்காக திமுக கூட்டணியில் 2 தொகுதிகளையும், கடந்த முறையைப் போல தனக்கு ஒரு ராஜ்யசபா பதவி எதிர்பார்ப்பதாகவும் கூறப்படும் நிலையில், திமுகவோ, கடந்த முறையைப் போலவே 1 + 1 மட்டும் ஒதுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும், மதிமுக – திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறியில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி, தனது முக்கிய கட்சிகளுடன் தொகுதிபங்கீட்டை திமுக இன்னும் நிறைவு செய்யாத நிலையில் தான், அதிமுகவிடமிருந்து முதலில் காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தமிழகத்தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லி சென்ற போது பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு செல்வப்பெருந்தகை முற்றுப்புள்ளி வைத்த நிலையில் , தற்போது விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைக்க அதிமுக மறைமுகமாக முயற்சி செய்வதாக வலம் வரும் தகவல்களால் அதகளத்தில் இருக்கிறது தமிழக அரசியல் களம்.