ITamilTv

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதா பணியிடை நீக்கம்..!!

Spread the love

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்க செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ் – நாகஜோதி . கணவன் மனைவியான இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 12ம் தேதி நாகஜோதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது .

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த மருத்துவமனையில் மருத்துவராக அனுராதா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

மருத்துவர் அனுராதா கரூரைச் சேர்ந்த லோகாம்பாள் (38) என்பவருக்கு தகவலளித்து, ரூ.2 லட்சம் தருவதாக தினேஷ், நாகஜோதியிடம் பேரம் பேசி குழந்தையை விற்க கட்டாயப்படுத்தியுள்ளார். உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவரே குழந்தையை விற்க வற்புறுத்துவதால் குழந்தையின் பெற்றோர் நாமக்கல் கலெக்டர் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் அனுராதா , லோகாம்பாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மருத்துவர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்படுவதாகவும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோர் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை விற்பனை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version