Site icon ITamilTv

அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன? – ஈபிஎஸ்-யிடம் துரைமுருகன் தடாலடி கேள்வி

Spread the love

அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன என அவை முன்னவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியதால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவக பணியாட்கள் குறைக்கப்பட்டு உள்ளது. அம்மா உணவகத்திற்கு வழங்கப்படும் பொருட்களும் குறைவாக வழங்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு, அம்மா உணவகம் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.பணியாளர்கள் சூழற்சி முறையில் பணியில் உள்ளனர் என்றார்.இந்த மழை நேரத்தில் கூட இலவச உணவு அம்மா உணவகங்கள் மூலம் அளிக்கப்பட்டது என்றார்.

உடனே குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் என்ன? கலைஞர் பெயர் உள்ள எத்தனை திட்டங்களை மூடி உள்ளீர்கள் நீங்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகத்தை மூடினால் அனுபவிப்பீர்கள் என்றார்..

உடனே குறுகிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் பெயரில் உள்ள திட்டங்களை மூடியதால் தான் தமிழக மக்கள் உங்களுக்கு இந்த தண்டனை கொடுத்து உள்ளனர் (ஆட்சி அமைக்க முடியவில்லை) நீங்கள் அனுபவித்து கொண்டிருக்கிருக்கிறீர்கள் என்றார்.

இப்படி அம்மா உணவகம் குறித்து சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

முன்னதாக, ஒரத்தநாடு சட்டமன்ற அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம், கிராமப்புறங்களில் அதிக அளவில் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த அம்மா மினி கிளினிக்குகளை தமிழக அரசு மூடிவிட்டதாக புகார் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கடந்த ஆட்சியில் 2,000 மினி கிளினிக்குகளில் 1,820 கிளினிக்குகளில் தான் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தபட்டதாகவும், பல்வேறு இடங்களில் கழிவறைகள், மயானங்களில் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் அந்த இடங்களை நேரில் அழைத்து சென்று காட்ட தயாராக இருப்பதாக கூறினார்.


Spread the love
Exit mobile version