துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் உலகையே உலுக்கியுள்ளது. இந்த கோர சம்பவத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் உலகையே உலுக்கிய நிலையில் இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் நாடுகளிலும், இந்தியாவின் மேகாயலயாவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.