ITamilTv

புதுச்சேரியில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு – பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி!

Spread the love

புதுச்சேரியில் மின்கட்டணம் உயத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஒழுங்கு முறை ஆணையர் முன்னிலையில் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு மின் கட்டணம் ஏப்ரல் மாதம் உயர்த்தப்படுவது வழக்கம்.இதேபோல நடப்பு ஆண்டுக்கான மின் கட்டணம் கடந்த ஏப்ரலில் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் 2023-24ம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான இழப்பை சரிசெய்ய மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் கட்டணம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வீடுகளுக்கு 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 25 பைசா, 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. தெருவிளக்கு யூனிட்டிற்கு 78 பைசா, சிறு தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு 70 பைசா, எல்.டி. தண்ணீர் தொட்டிக்கு யூனிட்டிற்கு 72 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் வர்த்தக மின் கட்டணம் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 66 பைசா, 250 யூனிட்டுக்கு மேல் 77 பைசா உயர்த்தப்படுகிறது. குடிசை தொழிலுக்கு 100 யூனிட் வரை யூனிட்டிற்கு 25 பைசா, 300 யூனிட்டிற்கு மேல் யூனிட்டிற்கு 75 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு 60 பைசா, உயர்அழுத்த வர்த்தக நிறுவனங்களுக்கு யூனிட்டிற்கு 62 பைசா, விளம்பர பலகைகளுக்கு யூனிட்டிற்கு 59 பைசா கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.
இந்த திடீர் மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version