Site icon ITamilTv

”கொஞ்சம் சுயநினைவோடு பேசுங்க..” அண்ணாமலைக்கு TTV அட்வைஸ்!!

Spread the love

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (dinakaran) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் அப்போது பாரதிய ஜனதா கட்சிக்கான வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மட்டுமே. அதற்காக கடுமையான பிரசாரங்களை மேற்கோண்டதோடு, அம்மா அவர்கள் அமைத்த அந்த கூட்டணி மக்கள் ஆதரவோடு பெரும் வெற்றியைப் பெற்றுக் காட்டியது. இந்த வரலாறை திரு.அண்ணாமலை தெரிந்திருப்பாரா?

மக்களுக்கு நல்லது செய்வதையே தன் அடிப்படை குணமாகக் கொண்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதனால்தான் அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகள் பலவற்றை தி.மு.க தொடுத்தது.

எத்தனையோ குற்றச்சாட்டுகளையும் பொய் வழக்குகளையும் அவர் மீது எதிர்க்கட்சிகள் வாரி இரைத்த போதும், தமிழகத்தை ஆளுகிற பொறுப்பு தமிழக மக்களால் இதயதெய்வம் அம்மா அவர்களிடம் வழங்கப்பட்டது.

இந்தக் காலக்கட்டத்திலும் இந்திய அளவில் தமிழகம் பல துறைகளில் அடைந்திருக்கக்கூடிய பெருமைமிகு வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அம்மா அவர்களே என்பதை திரு.அண்ணாமலை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
ஏழைகளைத் தேடி அரசு,ஏழைகளுக்கான அரசு என்பதை நிலைநாட்டியதோடு, தமிழகத்திற்கான வளர்ச்சிப் பாதையை உருவாக்கியவர் அம்மா அவர்கள்.

அதனால்தான், அவரது ஆட்சி முறையைப் பல்வேறு மாநில அரசுகள் இன்றும் பின்பற்றுகின்றன.உலகம் வியந்த திட்டங்களைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதனால்தான் அன்னை தெரசா உட்பட பன்னாட்டுத் தலைவர்களும் மாண்புமிகு அம்மா அவர்களை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர்.

ஏன், இன்றைய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும் போயஸ் தோட்டத்தில் வந்து அம்மாவை சந்தித்து தனது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தினார்.உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இதயதெய்வம் அம்மா அவர்கள். இவை எதையும் உணராமல், அரசியல் பக்குவமின்றி திரு.அண்ணாமலை பேசிவருவது கடும் கண்டனத்திற்குரியது.

முதிர்ச்சியான அரசியல் புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசும் திரு.அண்ணாமலை தேசிய கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிற்கு தகுதியானவரா என்பதை அவரே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தினகரன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.


Spread the love
Exit mobile version