நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று பெரிய சக்தியாக உருவானது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் ஆதரவு அளித்ததால் கட்சியின் பலம் 120 ஆக உயர்ந்தது.
இதன் பின்னர் ஆளுநர் விஜயை அரசு அமைக்க அழைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அவர் முதலமைச்சராக பதவியேற்றார்.
விஜயுடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் ஒரே பெண் அமைச்சராகவும், மிக இளைய அமைச்சராகவும் 29 வயதான கீர்த்தனா இடம்பிடித்தார். சிவகாசி தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தற்போது அமைச்சராக உயர்ந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகளான கீர்த்தனா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் மற்றும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் முதுகலை படித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன் அரசியல் ஆலோசகராக பல கட்சிகளுக்கு தேர்தல் திட்டங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் தவெக கட்சியில் இணைந்து சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தமிழக அமைச்சரவையில் இளம் பெண் அமைச்சராக உயர்ந்துள்ளார்.

