தென்காசியில், ஆட்டு கொட்டகைக்குள் (sheepfold) புகுந்த வெறிநாய் ஒன்று 35 ஆடுகளை கொடூரமாக கடித்து குதறிய சோகம் அரங்கேறி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில், வெறிநாய் ஒன்று ஆட்டுக் கொட்டகைக்குள் புகுந்து 35 ஆடுகளை கொடூரமாக கடித்து குதறி தாக்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செல்வ குளத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் சொந்தமாக 50 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இதற்காக, அவர் இரும்பு வேலியிலான ஆட்டுக் கொட்டகை ஒன்றினை அமைத்து அதில் 50 ஆடுகளையும் பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு அந்த ஆட்டுக் கொட்டகைக்குள் (sheepfold) புகுந்த வெறிநாய் ஒன்று 35 ஆடுகளை கொடூரமாக கடித்து குதறியதில் கடிபட்டு பலத்த காயமடைந்த 35 ஆடுகளும் பரிதாபமாக பலியானது.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணசாமி வருவாய் துறைக்குத் தகவல் அளித்தார். அதன் பிறகு, அப்பகுதி கால்நடை மருத்துவர் ஆதித்யா சம்பவ இடத்திற்குச் சென்று ஆடுகளை பரிசோதனை செய்துள்ளார்.
சரியாக, ஒரு ஆடு வளர்ந்து குட்டி ஈனுவதற்கு 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், கிருஷ்ணசாமி மிகவும் கஷ்டமான பொருளாதார சூழ்நிலையில் அவர் வளர்த்து வந்த ஆடுகள் பரிதாபமாக இறந்து போனதால் அவரது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவர் தனக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.