தற்போது வரவுள்ள அரசு விடுமுறை நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அரசு ஊழியர்களுக்கு அரசு விடுமுறை பொருந்தாது என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையினால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. வரலாறு காணாத அளவுக்கு பொழிந்த இந்த மழையில் தூத்துக்குடி மாநகர் திருச்செந்தூர் காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு வசதிகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர், பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் வர்த்தக நிறுவனங்கள், வீடுகள், பள்ளிகள் என அனைத்திலும் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை உருவாக்கியதால் நிவாரண பணிகள் தமிழக அரசால் முடிக்க விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
ஆனாலும், நகரின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடியாத சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கடந்து 18ஆம் தேதியில் இருந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இனி வரவுள்ள அரசு விடுமுறை தினங்கள் அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது.. “தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது. மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் அதில் அரசு ஊழியர்களின் பணி அத்தியாவசியமானது. எனவே, அவர்களுக்கு தற்போது வரும் அரசு விடுமுறை நாட்கள் பொருந்தாது” என்று குறிப்பிட்டுள்ளார்.